மர்மநபர்கள் லாரியை வழிமறித்து ரூ 1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக பொய்யான தகவல் அண்ணன் தம்பி கைது


மர்மநபர்கள் லாரியை வழிமறித்து ரூ 1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக பொய்யான தகவல் அண்ணன் தம்பி கைது
x
தினத்தந்தி 7 Jun 2021 11:02 PM IST (Updated: 7 Jun 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மர்மநபர்கள் லாரியை வழிமறித்து ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசாருக்கு பொய்யான தகவல் கொடுத்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர்

அண்ணன்-தம்பி

திருக்கோவிலூர் அருகே உள்ள போ.மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் கவியரசன்(வயது 30). இவரது தம்பி அசோக்(27). இவர்கள் இருவரும் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். 
சம்பவத்தன்று கவியரசன் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து லாரியில் பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தார். அவரது தம்பி அசோக் கிளீனராக இருந்தார். 

லாரியை வழிமறித்து

திருக்கோவிலூர் மாடாம்பூண்டி கூட்டுரோடு போ மெய்யூர் கிராமத்திற்கு செல்லும் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தங்களின் லாரியை வழிமறித்து ரூ.1 லட்சத்தை கொள்ளை யடித்துச் சென்றதாக கவியரசனும், அசோக்கும் அவசர போலீசுக்கு 100 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருக்கோவிலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் விசாரணை

அதன்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் அங்கு கொள்ளை சம்பவம் நடைபெற்றதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கவியரசன், அசோக் ஆகிய இருவரையும் பிடித்து  விசாரணை நடத்தினர். 

பொய்யான தகவல்

அப்போது கவியரசன் மற்றும் அசோக் ஆகியோருக்கும் இவர்களின் ஊரைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் அவர்களை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் மர்மநபர்கள் லாரியை வழிமறித்து ரூ.1 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றதாக பொய்யான  தகவலை கொடுத்தது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசாருக்கு பொய்யான தகவலை கொடுத்த அண்ணன்-தம்பி இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story