சமூக இடைவெளியின்றி பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ராமநாதபுரத்தில் ஊரடங்கு உத்தரவு அரசின் உத்தரவின்படி தளர்த்தப்பட்டதால் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர்
ராமநாதபுரம்
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ராமநாதபுரத்தில் ஊரடங்கு உத்தரவு அரசின் உத்தரவின்படி தளர்த்தப்பட்டதால் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.
கடைகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபாதை வியாபார கடைகள், சில்லரை விற்பனை கடைகள் தவிர அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பல நாட்களுக்கு பின்னர் கடைகள் திறந்ததால் ராமநாதபுரத்தில் நகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது கிராமங்களை சேர்ந்த மக்களும் ஆயிரக்கணக்கானோர் பொருட்களை வாங்குவதற்காக நேற்று காலை முதலே கடைவீதிகளை நோக்கி வந்தனர்.
குறிப்பாக ராமநாதபுரம் சாலைத்தெரு, அரண்மனை, சிகில்ராஜ வீதி, கோட்டைவாசல் விநாயகர் கோவில் பகுதி, பவுண்டுகடை தெரு, தபால்நிலைய தெரு, வண்டிக்காரத்தெரு, சின்னக்கடை, பாரதிநகர், கேணிக்கரை போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் கடைகளை நோக்கி அலைமோதியது. பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் என அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியின்றி மக்கள் முண்டியடித்துக்கொண்டு நோயின்றி செல்ல வேண்டும் என்ற எண்ணிமின்றி பொருட்களை வாங்குவதிலேயே குறியாக இருந்தனர்.
எச்சரிக்கை
போலீசார் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் செல்ல எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. பிளம்பிங், பெயிண்டர், எலக்ட்ரிக் வேலை போன்ற தொழிலாளர்கள் மற்றும் அவை சார்ந்த மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க திரண்டு வந்ததால் ராமநாதபரதம் கடைவீதிகள் அனைத்தும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. ராமநாதபுரம் நகரில் அதிகரித்த மக்கள் நடமாட்டம் சமூக இடைவெளியின்றி மக்கள் நடந்து சென்றது கொரோனா பரவும் ஆபத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சப்-கலெக்டர் சுகபுத்ரா, நகரசபை ஆணையாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நகர் பகுதியில் ரோந்து சுற்றி அரசின் உத்தரவினை மீறி திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லியதோடு நடைபாதை கடைகளை எடுத்துச்செல்லும்படி கூறினர்.
மேலும், மக்கள் கூட்டமின்றி பொருட்களை கொடுத்தனுப்பும்படி கடைக்காரர்களை எச்சரித்தனர். கடந்த பல நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கட்டுக்குள் கொண்டுவந்த கொரோனா பரவல் நேற்று ஒருநாளில் மக்கள் நடந்து கொண்ட விதத்தில் மீண்டும் உச்சத்தை எட்டிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story