திரவ உயிர் உரங்களை பயன்படுத்தினால் மகசூல் அதிகரிக்கும்


திரவ உயிர் உரங்களை பயன்படுத்தினால் மகசூல் அதிகரிக்கும்
x
தினத்தந்தி 7 Jun 2021 11:05 PM IST (Updated: 7 Jun 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தினால் மகசூல் அதிகரிக்கும் என வேளாண் அதிகாரி கூறினார்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தினால் மகசூல் அதிகரிக்கும் என வேளாண் அதிகாரி கூறினார்.
மகசூல் அதிகரிக்கும்
விவசாயிகள் அதிகமாக ரசாயன உரங்கள் பயன்படுத்தினால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, செலவினமும் அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் திரவ உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி, மண்ணின் வளத்தை காத்திடவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும் முடியும். குறைந்த செலவில் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த அங்கக இடுபொருட்களான உயிர் உரங்களை பயன்படுத்துவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மகசூலை அதிகரிக்கலாம். 
இதற்காக ராமநாதபுரத்தில் உள்ள உயிர் உர உற்பத்தி மையத்தில் திட மற்றும் திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. 
அசோஸ்பைரில்லம் நெல், சோளம், ராகி, குதிரைவாலி, மிளகாய் மற்றும் தென்னை போன்ற பயிர்களுக்கும், ரைசோபியம் பயறு, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கும், பாஸ்போபாக்டீரியா நெல், தென்னை, மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும், அசோபாஸ் நெல் மற்றும் இதர பயிர்களுக்கும், பொட்டாஷ் சத்துக்களை விடுவிக்கும் பாக்டீரியா அனைத்து பயிர்களுக்கும் பயன்படும் வகையில் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆய்வு
திரவ உயிர் உரங்கள் விதை நேர்த்திக்கு 125 மி.லி. நாற்றுவேரை நனைத்து நடுவதற்கு 250 மி.லி. எக்டருக்கு நேரடியாக நடவு வயலில் இடுவதற்கு 500 மி.லி. என்ற அளவில் பயன்படுத்தலாம். ஒரு எக்டருக்கு 500 மி.லி. போதுமானது. 
இதில் மகசூல் 10 முதல் 25 சதவீதம் அதிகமாகும். மண்ணின் உயிரியல் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, மண்ணின் இயற்கை வளத்தை தக்க வைக்கிறது. பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் சக்தியை பெருகின்றன. மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை பயிர்களுக்கு அளிக்கிறது. 
இயற்கை சூழலுக்கு ஏற்றது. எனவே விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து, திரவ உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி மண்வளம் காத்து அதிக மகசூல் பெற்றிட வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் டாம் சைலஸ் தெரிவித்துள்ளார். 

Next Story