வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்; வியாபாரிகள் ஏமாற்றம்
வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்; வியாபாரிகள் ஏமாற்றம்
ராமேசுவரம்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2 வாரத்திற்கு மேல் ஆகவே முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதன் எதிரொலியாக நேற்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியிலும் 2 வாரத்திற்கு பிறகு நேற்று மளிகை பேக்கரி, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இரண்டு வாரத்திற்கு பிறகு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டு வந்த திட்டக்குடி சந்திப்பு சாலை மற்றும் கடைவீதி சாலையும் மக்கள் நடமாட்டத்துடன் நேற்று பரபரப்பாகவே இருந்தது. அதுபோல் ெரயில்வே நிலையம் அருகே செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் நேற்று காய்கறி வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் இல்லாமல் காய்கறி மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அதிகமான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க மார்க்கெட்டிற்கு வராததால் வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் ராமேசுவரம் பகுதியில் வீடுகளுக்கு சென்று ஏராளமான வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் நேரடியாக மார்க்கெட்டில் வந்து காய்கறிகள் வாங்குவதை தவிர்த்து விட்டதாகவே கூறப்படுகின்றது.
Related Tags :
Next Story