நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
பாம்பன் பகுதியில் அதிகமான நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்று மீனவர்கள் கரை திரும்பினர். இதனால் மீன்கள் விலை குறையுமா எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்
பாம்பன் பகுதியில் அதிகமான நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்று மீனவர்கள் கரை திரும்பினர். இதனால் மீன்கள் விலை குறையுமா எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மீன்பிடிக்க சென்றனர்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2 வாரத்திற்கு மேல் ஆகவே முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்த முழு ஊரடங்கு காரணமாக காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மீன் கடைகளும் மூடப்பட்டிருந்த காரணத்தால் மீன்பிடித் தொழிலை நம்பி இருந்த ராமேசுவரம் பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் உள்ள ஏராளமான மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்தது. அதில் மீன், இறைச்சி, காய்கறி உள்ளிட்ட கடைகளும் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து பாம்பன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சூடை, காரல், முரல் உள்ளிட்ட பலவகை மீன்களுடன் கரை திரும்பினார்கள். மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளும் நேரடியாகவே கடற்கரைக்கு வந்து வாங்கி சென்றனர்.
குறையுமா?
அதுபோல் ராமேசுவரம், பாம்பன் தங்கச்சிமடம் பகுதிகளில் உள்ள மார்க்கெட் பகுதிகளிலும் நேற்று முதல் மீன் விற்பனை செய்யப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே அதிகமான நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் சிறிய வத்தை மற்றும் ஒரு சில நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வந்ததால் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களும் விலை அதிகமாகவே இருந்தது.
தற்போது மீன் கடைகள் திறக்கலாம் என அரசின் அறிவிப்பை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன் பகுதியில் அதிகமான நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தொடங்கியுள்ளதால் மீன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் கடந்த சில வாரங்களாகவே வெறிச்சோடி காணப்பட்டு வந்த பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதி நேற்று மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வந்ததால் மீனவர்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story