நீலகிரியில் தனியாக செயல்படும் அத்தியாவசிய கடைகள் திறப்பு
ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நீலகிரியில் தனியாக செயல்படும் அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மார்க்கெட் திறக்க அனுமதிக்காததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஊட்டி,
ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நீலகிரியில் தனியாக செயல்படும் அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மார்க்கெட் திறக்க அனுமதிக்காததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
புதிய தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 14-ந் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால். சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி நேற்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தது. ஊட்டியில் தனியாக செயல்பட்டு வரும் மளிகை, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டது.
பழ கடைகள், பூ விற்பனை செய்யும் கடைகள், நடைபாதை கடைகள் திறந்து செயல்பட்டது. இந்த கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, மளிகை கடைகள் நெருக்கமாக உள்ளதால் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு இருந்தது. தொற்று பாதிப்பு குறைந்த பிறகு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில தளர்வுகள் நடைமுறைக்கு வந்தவுடன் 2 வாரம் வீடுகளில் முடங்கி இருந்த மக்கள் வெளியே வர தொடங்கினர். இதனால் ஊட்டி கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சந்திப்பு, எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
அதே போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அதிகம் பேர் வந்தனர். தனியாக செயல்பட்டு வரும் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்லும்படியும், கட்டாயம் முககவசம் அணியும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாகன போக்குவரத்து
ஊட்டியில் உழவர் சந்தை திறக்கப்படவில்லை. ஊட்டி நகரில் போலீசார் சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து கண்காணித்தனர். வெளியே வாகனங்களில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி எதற்காக செல்கின்றனர் என்று விசாரித்தனர். அவசிய காரணங்களுக்காக செல்கிறவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குன்னூர் பஸ் நிலைய பகுதியில் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்கும் கடைகள் திறந்து இருந்தன. அங்கு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் இருந்தது. மேலும் வாகன போக்குவரத்தும் அதிகரித்தது.
ஏமாற்றம்
கோத்தகிரி நகரில் தனியாக செயல்படும் அத்தியாவசிய கடைகள் திறந்து இருந்தது. ஆனால் கோத்தகிரி மார்க்கெட் மற்றும் காந்தி மைதான திறந்தவெளி மார்க்கெட் திறக்கப்படவில்லை. அங்கு கடைகளை திறக்க வந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, நெருக்கமாக உள்ள கடைகளை திறக்க அனுமதி இல்லை. இதனால் அந்த மார்க்கெட்டுகளை திறக்க கலெக்டரிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 2 வாரங்களுக்கு பிறகு மளிகை, காய்கறி, மீன், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டது. இதனால் காலை முதல் மதியம் வரை மக்கள் கூட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. மேலும் சில பூக்கடைகள் திறந்து இருந்தது.
அரசு அலுவலகங்களில் 30 சதவீத பணியாளர்கள் பணிக்கு வந்தனர். மேலும் அத்தியாவசிய பட்டியலில் இல்லாத கடைகளும் திறக்கப்பட்டது. இதனால் கூடலூர் நகரம் மற்றும் மசினகுடி, பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட பஜார்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது
Related Tags :
Next Story