தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி


தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 7 Jun 2021 11:12 PM IST (Updated: 7 Jun 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. கிலோவுக்கு ரூ.5 குறைந்தது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. 

விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இங்கு தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஆன்லைனில் தேயிலைத்தூள் ஏலம் நடைபெறுகிறது. தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும்.

விலை வீழ்ச்சி

இந்த நிலையில் கடந்த 27, 28-ந் தேதிகளில் நடைபெற இருந்த ஏலம்(விற்பனை எண்-21) தேயிலை கிடங்குகள் மூடப்பட்டதால், தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அந்த ஏலம் கடந்த 3, 4-ந் தேதிகளில் நடைபெற்றது. இதற்கு 23 லட்சத்து 90 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. 

அதில் 18 லட்சத்து 26 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 5 லட்சத்து 64 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 17 லட்சத்து 62 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 74 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.20 கோடியே 62 லட்சம். ஏலத்தில் அனைத்து ரக தேயிலைத்தூள்களிலும் கிலோவுக்கு ரூ.5 விலை வீழ்ச்சி ஏற்பட்டது. 

அடுத்த ஏலம்

ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.300, சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.241 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.96 முதல் ரூ.100 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.158 முதல் ரூ.186 வரை ஏலம் போனது. 

டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.102 முதல் ரூ.106 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.180 முதல் ரூ.196 வரை விற்பனையானது. தேயிலைத்தூள் விலை குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். விற்பனை எண் 22-க்கான ரத்து செய்யப்பட்டு, விற்பனை எண் 23-க்கான ஏலம் வருகிற 10, 11-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. 


Next Story