விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் திறப்பு
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் நேற்று காலை 6 மணி வரை அமலில் இருந்தது.
இந்நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.
காய்கறி கடைகள் திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கையொட்டி காய்கறி, மளிகை கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள மார்க்கெட் பகுதிகள் மற்றும் நேருஜி சாலையில் மக்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்தனர்.
கொரோனா அதிகரிக்கும் அபாயம்
மேலும் பலர் தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தனர். கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில மக்கள் கூட்டத்தால் தற்போது அது அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதேபோல் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
Related Tags :
Next Story