‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தில் 18,788 மனுக்கள் பெறப்பட்டுள்ளன
குமரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் 18,788 மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் 18,788 மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் "உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்" திட்டம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு, தான் முதல்-அமைச்சராக பதவியேற்றவுடன் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தினை தொடங்கி அதை செயல்படுத்துவதற்காக தனியாக துறையினை உருவாக்கப்படும் என்றும், அதற்கு இந்திய ஆட்சி பணி நிலையில் சிறப்பு அலுவலரை நியமித்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்.
சிறப்பு அலுவலர் நியமனம்
அதன்படி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தினை தொடங்கி அதற்காக ஷில்பா பிரபாகர் சதீஷ் என்பவரை சிறப்பு அலுவலராக நியமித்து திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். குமரி மாவட்டத்திற்கு சிறப்பு அலுவலராக பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இத்திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் இதுவரை பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத்தொகை உள்ளிட்ட உதவிகள் கோரியும், சாலைவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் கோரியும் பெறப்பட்ட 18,788 மனுக்கள் மீது துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தகுதியான நபர்களின் மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சொர்ணராஜ், உதவி ஆணையர் (கலால்) சங்கரலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன், பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story