நாகர்கோவிலில் தடுப்பூசி போட அலைமோதிய மக்கள் கூட்டம்
நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தடுப்பூசி போட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தடுப்பூசி போட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் தற்போது 18 வயதுக்கு உட்பட்டவர்களை தவிர்த்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா 2-வது அலை பரவல் அதிகமாக இருப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே இருப்பு இல்லை. இதனால் கடந்த 2 நாட்களாக யாருக்கும் தடுப்பூசி போடவில்லை.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டத்திற்கு வந்தன. இதைத் தொடர்ந்து தடுப்பூசி போட நாகர்கோவில் இந்து கல்லூரியில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. அங்கு கோவேக்சின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தகுதியான அனைவருக்கும் போடப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது.
நீண்ட வரிசை
இதற்கான டோக்கன்கள் காலை 8 மணி முதல் வழங்கப்பட்டன. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் காலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால் முதலில் வந்தவர் களுக்கு மட்டும் தடுப்பூசி போடுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக போட்டிருந்த வட்டத்தில் வரிசையாக நின்றனர். இந்த வரிசையானது கல்லூரிக்கு வெளியே வரை இருந்தது.
ஆனால் பெரும்பாலானோருக்கு தடுப்பூசிக்கான டோக்கன் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வெளியூரில் இருந்து காலையிலேயே வந்து காத்திருந்ததாகவும், ஆனால் தங்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை என்றும் பலர் குற்றம் சாட்டியதை பார்க்க முடிந்தது.
குமரி மாவட்டத்தில் கடந்த 5-ந்தேதி நிலவரப்படி 1 லட்சத்து 82 ஆயிரத்து 757 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 24 ஆயிரத்து 122 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story