கொரோனா ஊரடங்கால் புளி பதப்படுத்தும் தொழில் முடங்கியது
தர்மபுரி மாவட்டத்தில் ஏராளமான பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்த புளிபதப்படுத்தும் தொழில் கொரோனா ஊரடங்கால் முடங்கி உள்ளது.
தர்மபுரி:
புளி பதப்படுத்தும் தொழில்
தர்மபுரி மாவட்டத்தில் புளி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் புளி அறுவடை சீசன் தொடங்கியது. புளியை நசுக்கி அதில் உள்ள கொட்டைகளை நீக்கி பதப்படுத்தி வழங்கும் பணி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் குடிசை தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.
அறுவடை செய்யப்பட்ட புளியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்குவார்கள். புளியை நசுக்கி தூய்மைப்படுத்தி தரும் பெண்களுக்கு அவற்றின் அளவின் அடிப்படையில் கூலி வழங்கப்படும். சீசன் காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வீடுகளில் இருந்தபடியே புளியை தூய்மைப்படுத்தி கொடுத்து ஒரு நாளில் ரூ.150 முதல் ரூ.200 வரை வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர்.
தொழில் முடங்கியது
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் வீடுகளில் பெண்கள் மேற்கொண்டு வந்த புளி நசுக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு கிடைத்து வந்த கூலி தற்போது கிடைக்கவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட புளி தூய்மைபடுத்தப்படாமல், கிடங்குகளில் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் உற்பத்தியாளர்கள் ஓடுகள் நீக்கப்படாத புளியை குவியல்களாக குவித்து வைத்து உள்ளனர். இதனால் புளி பதப்படுத்தும் தொழில் முடங்கியது.
தேக்கம்
இதுதொடர்பாக புளி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் புளியை தூய்மைப்படுத்தி மதிப்பு கூட்டு பொருளாக மாற்றும் பணியில் வீடுகளில் இருந்தபடியே ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த புளி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். பல ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த புளி பதப்படுத்தப்படும் தொழில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக தற்போது முடங்கி உள்ளது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புளி தூய்மைப்படுத்தப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் புளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் என இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்து தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story