தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது: காய்கறி, மளிகை கடைகள் திறப்பு
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.
தர்மபுரி:
ஊரடங்கு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு வருகிற 14 -ந் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக ஒரு சில செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாலை 5 மணி வரை இந்த கடைகள் திறந்து இருந்தன.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கியது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. சார் பதிவாளர் அலுவலகங்களில் 50 டோக்கன்கள் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது. எலக்ட்ரிக்கல் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் வயர்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டன. சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன வினியோகிப்பாளர்களின் பழுது நீக்கும் மையங்கள் ஆகியவை மாலை 5 மணி வரை திறந்திருந்தது.
ஆர்வம் காட்டவில்லை
தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஆட்டோ, டாக்சிகள் இயங்க அனுமதி வழங்கப் பட்டன. அதில் பொதுமக்கள் செல்ல ஆர்வம் காட்டவில்லை. இதேபோன்று அரசு திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகள் திறந்து இருந்தாலும் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தர்மபுரி நகரில் உள்ள டவுன் பஸ் நிலையத்தில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. நகரம் முழுவதும் கடைகள் திறந்திருந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது.
Related Tags :
Next Story