சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது
‘சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவம், உணவு
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது கொரோனா காலத்தில் நாங்கள் எவ்வாறு சிறப்பாக பணிபுரிந்தோம் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் முழுமையாக செய்து கொடுக்க வேண்டும்.
குறிப்பாக நோயாளிகளை மரியாதையாக நடத்த வேண்டும். உயிரிழப்புகள் தற்போது குறைத்து காண்பிக்கப்படுகின்றன. இது தவறாகும்.
எந்த சம்பந்தமும் கிடையாது
உச்சநீதிமன்றம் கொரோனாவை தேசிய பேரிடர் என அறிவித்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவருக்கு ரூ.4 லட்சம் கிடைக்கும். அதனால் இறந்தவர்களை சரியான முறையில் கணக்கெடுத்து அறிவிக்க வேண்டும்.
தற்போது சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. இதை நீதிமன்றமும் சரி என தீர்ப்பு கூறியுள்ளது.
கருவாடு கூட மீன் ஆகலாம். ஆனால் ஒரு காலமும் சசிகலா அ.தி.மு.க.வில் உறுப்பினராக முடியாது.
போராட்டம் நடத்தப்படும்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை மற்றும் பல்வேறு துறைகள் மூலம் ரூ.200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு சில பணிகள் தொடங்கப்பட்டன. சில பணிகள் தொடங்கப்பட இருந்தன.
ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே டெண்டர் விடப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் தொடங்கி முடிக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விழுப்புரத்தில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், பேட்டை முருகன், சுரேஷ்பாபு, எசாலம் பன்னீர், கராத்தே பக்தவச்சலம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஷெரிப், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story