பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
திசையன்விளை அருகே பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை, ஜூன்:
திசையன்விளை அருகே உள்ள தரகன்காட்டை சேர்ந்தவர் அழகுராஜா. இவருடைய மனைவி பாலசரஸ்வதி (வயது 32). இவர் திசையன்விளை பஞ்சாயத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பகலில் செல்வமருதூர் பவுண்டு தெரு அருகில் நின்று பாலசரஸ்வதி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று பாலசரஸ்வதியின் செல்போனை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசரஸ்வதி சத்தம் போட்டார்.
இதுகுறித்து உடனடியாக திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் திசையன்விளை தங்கம் திருமண மண்டப தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (26) உள்பட 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சண்முகசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story