நெல்லையில் ஊரடங்கு தளர்வுகள் அமல்; மளிகை- காய்கறி கடைகள் திறப்பு
நெல்லையில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் மளிகை, காய்கறி கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
நெல்லை, ஜூன்:
நெல்லையில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் மளிகை, காய்கறி கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கார், ஆட்டோக்கள் ஓடின.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பஸ்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. மருந்து கடைகள், ஒரு சில ஓட்டல்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இருந்தாலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களாக காய்கறி, மளிகை பொருட்கள், பழங்கள் அரசு அனுமதி ெபற்று நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் நேற்று முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது.
கடைகள் திறப்பு
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை, காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்து இருந்தது.
இதேபோல் சிறிய ஒர்க்ஷாப், உதிரிப்பாகங்கள் விற்பனை கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், ஹார்வேர்டு கடைகள் திறந்திருந்தன.
இதனால் நெல்லை மாநகர பகுதியான நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளிலும், அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, வள்ளியூர், திசையன்விளை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. காய்கறி, மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும் காய்கறி, மளிகை பொருட்கள் வாகனங்களிலும் தெருக்களுக்கு சென்று தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
இறைச்சி விற்பனை
நெல்லை மாவட்டத்தில் உள்ள மொத்த மீன் விற்பனை ஏஜெண்டுகள் நேற்று விற்பனையை தொடங்கினார்கள். ஆனால் சில்லறையாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் இறைச்சிக்கடைகள், கோழி கடைகள் திறக்கப்படவில்லை.
இதனால் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இறைச்சி, மீன் வியாபாரிகள் பலர் நேற்று பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக இறைச்சிகளை வழங்கினார்கள்.
அரசு அலுவலகங்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் நேற்று குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கியது. இதுவரை பூட்டப்பட்டிருந்த பத்திரப்பதிவு அலுவலகம் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. அங்கு ஒரு நாளைக்கு 50 பேர் மட்டுமே டோக்கன் வழங்கி பத்திரப்பதிவு நடந்தது. இந்த அலுவலகங்களிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அனைத்து வங்கிகளும் பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கியுள்ளதால், பொதுமக்கள் சமூக இடைவெளியில் நின்று பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டனர்.
வாகன போக்குவரத்து அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. பஸ் போக்குவரத்து மட்டும் நடைபெறவில்லை. ஆனால் கார், வேன், லாரி, இருசக்கர வாகனங்கள் பெருமளவில் இயங்கின. ஆட்டோக்கள் குறைந்த அளவில் ஓடியது.
நெல்லை மாநகர பகுதியில் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், ஜவுளி கடைகள், நகை கடைகள், டீக்கடைகள் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் எதுவும் செயல்படவில்லை. போலீசார் வழக்கம்போல் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்தை கண்காணித்தனர். இ-பதிவு இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டது. இதுபோல் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
Related Tags :
Next Story