உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தாவணகெரே டவுனில், திருமணம் ஆனதை மறைத்ததுடன் உல்லாசம் அனுபவித்து பெஸ்காம் ஊழியர் ஏமாற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
சிக்கமகளூரு:
தாவணகெரே டவுனில், திருமணம் ஆனதை மறைத்ததுடன் உல்லாசம் அனுபவித்து பெஸ்காம் ஊழியர் ஏமாற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
இளம்பெண்
தாவணகெரே (மாவட்டம்) டவுன் பரத் காலனியில் வசித்து வந்தவர் ஆஷா(வயது 26). இவர் அப்பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வநதார். இந்த நிலையில் அப்பகுதிக்கு அடிக்கடி வந்து சென்ற பெஸ்காம் மின்வாரிய ஊழியர் ஈரண்ணா(32) என்பவருடன் ஆஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. பின்னர் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இதில் ஈரண்ணாவை ஆஷா உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.
பின்னர் இருவரும் அடிக்கடி உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர். இதையடுத்து ஈரண்ணாவிடம், ஆஷா அடிக்கடி திருமணத்திற்கு வற்புறுத்தி வந்தார். ஆனால் ஈரண்ணா திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார்.
திடுக்கிடும் தகவல்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரண்ணாவை சந்தித்த ஆஷா, உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். அப்போது ஈரண்ணா திடுக்கிடும் தகவலை ஆஷாவிடம் தெரிவித்துள்ளார்.
அதாவது தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதாகவும், அதனால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் ஆஷாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து கொள்ளும்படியும் ஆஷாவிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன ஆஷா, ஈரண்ணாவிடம் அழுது புரண்டு சண்டை போட்டுள்ளார்.
ஆனால் ஈரண்ணா, ஆஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ஆஷா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தனது செல்போனில் தன்னுடைய சாவுக்கான காரணம் குறித்து உருக்கமான ஒரு செல்பி வீடியோவை பதிவு செய்திருந்தார்.
அந்த வீடியோவில் அவர், ‘‘ஈரண்ணா, தான் திருமணமாகாதவர் என்று என்னிடம் கூறி காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு என்னை ஏமாற்றி விட்டார்.
இதனால் நான் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு காரணமான ஈரண்ணாவை பிடித்து போலீசார் தண்டிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆஷாவின் செல்பி வீடியோவையும், அவர் ஈரண்ணாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து ஆர்.எம்.சி. யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story