கர்நாடகத்தில் 149 தாலுகா, 19 மாவட்ட ஆஸ்பத்திரிகள் தரம் உயர்வு
கொரோனா 3-வது அலையை தடுக்க கர்நாடகத்தில் 149 தாலுகா, 19 மாவட்ட ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு:
கொரோனா 3-வது அலையை தடுக்க கர்நாடகத்தில் 149 தாலுகா, 19 மாவட்ட ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
எடியூரப்பா முடிவு
கொரோனா தடுப்பு தொடர்பான மாநில செயல்படையின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவரான துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த செயல்படையின் உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்வார்.
கொரோனா 3-வது அலை தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
4,000 டாக்டர்கள்
தாலுகா ஆஸ்பத்திரிகளில் தலா 25 ஐ.சி.யு. படுக்கைகள், 50 ஆக்சிஜன் படுக்கைகள், 25 சாதாரண படுக்கைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தாலுகா, மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற 4,000 டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள்.
அந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்தும். பெங்களூருவில் புதிய ஆஸ்பத்திரி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் பன்னோக்கு ஆஸ்பத்திரியை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ரூ.1,000 கோடி செலவில் 149 தாலுகா ஆஸ்பத்திரிகள், 19 மாவட்ட ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
பிரதமருக்கு நன்றி
ஒரு சட்டசபை தொகுதிகளில் தலா 100 படுக்கைகள் கொண்ட ஒரு ஆஸ்பத்திரி, 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2,300 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க ரூ.25 கோடி நிதி உதவி செய்கிறோம்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசே தடுப்பூசி வழங்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். கர்நாடகம் இனி தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாது. ஏற்கனவே 3 கோடி தடுப்பூசி கொள்முதலுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். அதை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
22 லட்சம் டோஸ் தடுப்பூசி
கர்நாடகத்திற்கு மத்திய அரசு நடப்பு மாதத்தில் 58 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வழங்கவுள்ளது. அத்துடன் தனியார் மருத்துவமனைகள் 22 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வாங்குகின்றன.
ஆகமொத்தம் நடப்பு மாதத்தில் மட்டும் கர்நாடகத்திற்கு 80 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வரவுள்ளன. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 5 லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை வாங்கி கிடங்கில் பாதுகாத்து வைக்க முடிவு செய்துள்ளோம்.
கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்தை மத்திய அரசு வினியோகம் செய்து வருகிறது. கர்நாடகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா மரபணு பரிசோதனை கூடங்களை 6 இடங்களில் அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story