காய்கறி, மளிகை கடைகள் திறப்பு


காய்கறி, மளிகை கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 8:07 PM GMT (Updated: 7 Jun 2021 8:07 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் 14 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் 14 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை அமலில் இருந்த  தளர்வுகள் இல்லா ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நோய் தொற்று குறையாததால் தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தஞ்சை மாவட்டத்தில் மளிகை கடைகள், இறைச்சி, காய்கறி கடைகள் சாலையோர கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைகள் திறப்பு
 ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து 14 நாட்களுக்கு பிறகு நேற்று மளிகை கடைகள், இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. குறிப்பாக தஞ்சை கீழவாசல் பகுதிகளில் ஏராளமான சாலையோர கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. மளிகை கடைகள், இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டன.
 பொது மக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் தள்ளுவண்டி, வாகனங்களிலும் காய்கறிகள் பழங்கள் இறைச்சி போன்றவை விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சையில் நேற்று இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. போலீசாரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வந்த நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதைப்போல திருவையாறு, திருக் காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம், கண்டியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் காய்கறி, மளிகை,  இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

Next Story