சுரண்டை- பாவூர்சத்திரத்தில் 7 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம்
சுரண்டை, பாவூர்சத்திரத்தில் 7 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
சுரண்டை, ஜூன்:
கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இதுகுறித்த விவரங்கள் வியாபாரிகளுக்கு சுரண்டை நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், சுரண்டை நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் சுரண்டை கடைவீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயங்கிய 2 நகை அடகு கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200, கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு தலா ரூ.500-ம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் பாவூர்சத்திரத்தில் அரசின் தடை உத்தரவை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடை, செல்போன் கடை, தச்சுப்பட்டறை, லேத் ஒர்க்ஸ், பர்னிச்சர் கடை ஆகிய 5 கடைகளுக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சங்கரநாராயணன், கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர் பார்த்தசாரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா ஆகியோர் சென்று ஆய்வு நடத்தி இந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story