ஊரடங்கு தளர்வுகளின்படி கடைகள் திறப்பு
அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளின்படி கடைகள் திறக்கப்பட்டன. வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.
அரியலூர்:
கடைகள் திறப்பு
ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் நேற்று கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதில் அரியலூரில் ஜவுளி, நகைக்கடைகளை தவிர மற்ற கடைகள் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருந்தன. மேலும் ஊரடங்கில் அனுமதிக்கப்படாத பாத்திரம், காலணி, சலூன், தள்ளுவண்டியில் பலகார கடைகள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும், முக்கிய வீதிகளை தவிர பல இடங்களில் திறக்கப்பட்டிருந்தன. நகரில் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருந்தது.
முககவசம் அணிந்து பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்காக மளிகை, காய்கறி, மருந்து கடைகள், உணவு விடுதிகளை மட்டும் திறக்க அனுமதித்த நிலையில், காந்தி மார்க்கெட் பகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் பகுதியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பட்டறைகள் உள்ளிட்டவை செயல்பட்டன. மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. இதுகுறித்து மளிகை கடை உரிமையாளர்கள் கூறுகையில், அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து வருகிறோம். பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளதால் எதிர்பார்த்த விற்பனை நடைபெறவில்லை. எனவே இரவு 8 மணி வரையில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கும் பட்சத்தில் போதிய வருமானம் ஈட்ட முடியும். நேரம் குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகமாக கூடிவருகிறது. பொருட்கள் வாங்கும் முன் கடைகளை அடைத்து விடுவார்களோ? என அவசர அவசரமாக வெளியூர்களில் இருந்து வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். கடைக்காரர்களுக்கு அபராதம் விதிப்பதை தவிர்த்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என்றனர்.
இதற்கிடையே ஜெயங்கொண்டம் 4 ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், 4 ரோடு மற்றும் கடைவீதி பகுதியில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மீன் மற்றும் இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, மீன் மார்க்கெட் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான திடலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க இருசக்கர வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது, அதனை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தார்.
ஆண்டிமடம்
ஆண்டிமடம் பகுதியில் மளிகை, இறைச்சி, காய்கறி உள்ளிட்ட கடைகள் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை திறந்திருந்தன. கடைகளில், பொதுமக்கள் தேவையான பொருட்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாங்கி சென்றனர். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், சரக்கு வாகனம் அதிக அளவில் கடைவீதியில் வாகன போக்குவரத்து காணப்பட்டது. அரியலூர் குறுவட்ட கண்காணிப்பு குழு வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் உமாபதி ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது முக கவசம் அணியாமல் இருந்த 4 பேருக்கு தலா ரூ.200 வீதம் 800 ரூபாயும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 பேருக்கு தலா ரூ.500 வீதம் 2,500 ரூபாயும், ஊரடங்கை மீறி வியாபாரம் செய்த 2 நிறுவனங்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் பத்தாயிரம் ரூபாயும் என மொத்தம் ரூ.13 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டு உரியவர்களிடம் ரசீது வழங்கினர். ஆண்டிமடம் பத்திரப்பதிவு அலுவலர் பிரகாஷ் கூறுகையில், கடந்த மாதம் 7-ந் தேதிக்கு முன்பு சராசரியாக ஒரு நாளைக்கு 40 பத்திரப்பதிவுக்கு மேல் நடைபெறும். கடந்த ஒரு மாத காலமாக பத்திரப்பதிவு ஏதும் நடக்காத சூழ்நிலையில், அரசு உத்தரவின்படி நேற்று 17 டோக்கன் வினியோகிக்கப்பட்டு, 14 பத்திரப்பதிவு மட்டுமே நடைபெற்றது, என்று கூறினார்.
தா.பழூர், விக்கிரமங்கலம்
தா.பழூர் பகுதியிலும் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் திறக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச்சென்றனர். தா.பழூர், காரைக்குறிச்சி, அணைக்குடம், இடங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் வீடு, வீடாக ஊராட்சி மன்றங்களின் ஏற்பாட்டின் பேரில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் போன்ற பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்டவை திறந்திருந்தன. கடை வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்டது. ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பொதுமக்கள், தற்போது வெளிவர தொடங்கியுள்ளனர். ஒரு சில இளைஞர்கள் முகத்தில் முக கவசமின்றி ஊர் சுற்றி வருகின்றனர்.
Related Tags :
Next Story