அகழாய்வு பணிகள் நடந்த இடத்தில் மழைநீர் தேங்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை


அகழாய்வு பணிகள் நடந்த இடத்தில் மழைநீர் தேங்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2021 2:52 AM IST (Updated: 8 Jun 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

மாளிகைமேட்டில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தில் மழைநீர் தேங்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மீன்சுருட்டி:

அகழாய்வு பணிகள்
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு தொல்லியல் துறையினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வெறிச்சோடியது
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதே மாளிகைமேட்டில் நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு காலம் முடிந்து மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அகழாய்வு பணிகள் நடைபெற்ற மாளிகைமேடு பகுதியானது வெறிச்சோடி காணப்படுகிறது.
மழைநீர் தேங்கும் அபாயம்
தற்போது அரியலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்ற இடத்தில், கோடை மழை பெய்தால், தோண்டப்பட்ட இடங்களை பாதுகாக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊரடங்கிற்கு முன்பு பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், மாளிகை மேட்டிற்கும் செல்வதும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story