கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்


கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 Jun 2021 6:34 AM IST (Updated: 8 Jun 2021 6:34 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவே ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக அலட்சியமாக இருக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம்பரம்,

தமிழகத்தில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகள் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை திறந்து இருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

எனினும் கொரோனா நோய் பரவலை தடுக்க சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதி மூடப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவருடன் தாம்பரம் நகராட்சி கமிஷனர் சித்ரா, தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியதாவது:-

அலட்சியம் வேண்டாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே மாதம் 12-ந் தேதி அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 2,600 ஆக இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் ஒரு நாள் பாதிப்பு 840 ஆக குறைந்து உள்ளது.

எனினும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக மட்டும்தான். எனவே கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். இனிமேல்தான் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வீடு தேடி வரும்

தாம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள பெரிய மார்க்கெட் வியாபாரிகளை வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி கமிஷனர் ஆகியோர் அழைத்து பேசினர். தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் 4 ஏக்கர் அளவில் தற்காலிக மார்க்கெட் செயல்பட இடம் ஒதுக்கி இருப்பதாகவும், தற்காலிகமாக அங்கு கடைகள் அமைக்கலாம் என்றும் கூறினர்.

ஆனால் வியாபாரிகள், கடந்த 2 வாரமாக தள்ளுவண்டியில் வைத்து விற்பதுபோல் தொடர்ந்து விற்பனை செய்து கொள்வதாக கூறினார்கள். இதனால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சிரமம் இருக்காது. எனவே தேவையின் அடிப்படையில் எத்தனை வாகனங்களுக்கு அனுமதி தேவைப்படுகிறதோ அதை வழங்கும்படி நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம். மளிகை மற்றும் காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் உங்கள் வீடுகளை தேடிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story