பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காய்ந்த நெற்பயிர்களுடன் வந்து மனு அளித்த விவசாயிகள்


பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காய்ந்த நெற்பயிர்களுடன் வந்து மனு அளித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 8 Jun 2021 6:38 AM IST (Updated: 8 Jun 2021 6:38 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காய்ந்த நெற்பயிர்களுடன் வந்து விவசாயிகள் மனு அளித்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடம்பத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகேயன், தயாளன், மாநில விவசாய பிரிவு இணைச்செயலாளர்கள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், களாம்பாக்கம் பன்னீர்செல்வம், பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ், மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

காய்ந்துபோனநெற்பயிர்களுடன்...

இந்த கூட்டத்தில் பேரம்பாக்கம், களாம்பாக்கம், சிற்றம்பாக்கம், தென்காரணை, பாகசாலை, மப்பேடு, கீழச்சேரி, கொட்டையூர், குமாரச்சேரி, ஓ.எம்.மங்கலம், சகாயதோட்டம், சிவபுரம், சத்தரை, கூவம் கொட்டையூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கு பெற்றனர். களாம்பாக்கம் மற்றும் சின்ன மண்டலி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் வயல்களுக்கு சரியான முறையில் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் நெற்பயிர்கள் காய்ந்து கிடக்கிறது என்று கூறி காய்ந்துபோன நெற்பயிர்களுடன் வந்து எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வருவதாகவும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் கூறினர். பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

மின்சார தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பேரம்பாக்கத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும், அதேபோல் மப்பேடு பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர். அப்போது வந்த பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண் தனது கணவர் கடந்த 18-ந்தேதி தனது கிராமத்தில் கஞ்சா விற்பது தொடர்பாக போலீசில் தகவல் சொன்னதற்காக 8 பேர் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இதில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். தங்கள் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி தனது 2 குழந்தைகளுடன் கதறி அழுதார். இது காண்போரை உருக்குவதாக இருந்தது.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

பின்னர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் பொதுமக்கள் கொடுத்த அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரம்பாக்கத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்து கொடுக்கவும், மப்பேடு பகுதியில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு துணைமின் நிலையம் அமைக்கவும் தங்குதடையின்றி மின்சார வினியோகம் செய்யவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தி தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் மணிமேகலை, செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜ், புருஷோத்தமன், கடம்பத்தூர் ஒன்றியகுழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், நிர்வாகிகள் கண்ணதாசன், மனோஜ்குமார், சரத்குமார், ராசி மணி உள்பபட பலர் கலந்து கொண்டனர்.

Next Story