கொரோனா பரவல் எதிரொலியாக நடவடிக்கை: புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து; ரங்கசாமி அதிகாரபூர்வ அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று
தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.இதையொட்டி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருந்த போதிலும் மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.இதற்கிடையே கடந்த மே மாதம் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படும் என்று புதுவை அரசு அறிவித்தது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்ததால் தேதி குறிப்பிடாமல் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டன.
இந்தநிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி அறிவித்தார். அதேபோல் புதுவையிலும் பிளஸ்-2 தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்து இருந்தார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு
இத்தகைய சூழலில் புதுவையிலும் பிளஸ்-2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் 12 ஆயிரத்து 353 மாணவ- மாணவிகளும், காரைக்காலில் 2 ஆயிரத்து 321 பேரும் 2020-21 கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாது என்று அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை பின்பற்றி பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story