பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அளவு குறைத்து வழங்கப்பட்டதாக புகார்
கொடைக்கானலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், அளவு குறைத்து வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் காந்திபுரத்தை சேர்ந்தவர் டிவைன். இவர், கொடைக்கானல் ஏரிச்சாலையில் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இவர், கொடைக்கானலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்றார். ரூ.150 கொடுத்து ஒரு கேனில் பெட்ரோல் வாங்கினார்.
ஆனால் தான் கொடுத்த பணத்துக்கு ஏற்ப பெட்ரோல் இல்லாததாலும், அளவு குறைவாக இருப்பதை கண்டும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அதாவது, ரூ.150-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களிடம் அவர் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் டிவைன் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் விற்பனை நிலைய எந்திரத்தில் குறிப்பிட்ட தொகைக்கான எண்களை அழுத்தி, குழாய் மூலம் வருகிற பெட்ரோலை கேனில் பிடித்து அதன் அளவை சரிபார்த்து விசாரித்தனர்.
மேலும் விற்பனை நிலையத்தில் பொருத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து இருதரப்பினரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பிரேம்சந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
--------
Related Tags :
Next Story