புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு: காரைக்கால் நோக்கி வாகனங்களில் படையெடுத்த ‘மதுப்பிரியர்கள்’ எல்லையில் மடக்கிப்பிடித்து திருப்பி அனுப்பிய போலீசார்
புதுச்சேரியில் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து தமிழக பகுதியை சேர்ந்த ‘மதுப்பிரியர்கள்’ காரைக்கால் நோக்கி வாகனங்களில் படையெடுத்தனர். அவர்களை எல்லையில் மடக்கிப்பிடித்து போலீசார் திருப்பி அனுப்பினர்.
நன்னிலம்:-
புதுச்சேரியில் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து தமிழக பகுதியை சேர்ந்த ‘மதுப்பிரியர்கள்’ காரைக்கால் நோக்கி வாகனங்களில் படையெடுத்தனர். அவர்களை எல்லையில் மடக்கிப்பிடித்து போலீசார் திருப்பி அனுப்பினர்.
மதுக்கடைகள் அடைப்பு
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்றுமுன்தினம் காலை 6 மணி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மளிகை, காய்கறி கடைகள் கூட திறக்கப்படவில்லை. மதுக்கடைகளும் முற்றிலுமாக அடைக்கப்பட்டு உள்ளன.
நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
புதுச்சேரியில் திறப்பு
தமிழகத்தையொட்டி உள்ள புதுச்சேரியில் நேற்று முதல் மதுக்கடைகளை திறக்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது அந்த மாநிலத்தை சேர்ந்த மதுப்பிரியர்களை உற்சாகப்படுத்தியதுடன், தமிழகத்தை சேர்ந்த ‘மதுப்பிரியர்களின்’ ஆசையையும் தூண்டி உள்ளது.
தமிழகம்-புதுச்சேரி எல்லையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களை சேர்ந்த பலர் மதுவாங்குவதற்காக புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காரைக்காலுக்கு மது வாங்க செல்பவர்களை தடுக்கும் விதமாக திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கீரனூர், கந்தன்குடி ஆகிய இடங்களில் தமிழகம்-புதுச்சேரி எல்லையையொட்டி உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நேற்று இந்த பகுதிகள் வழியாக மோட்டார் சைக்கிள்களில் காரைக்காலுக்கு மதுவாங்க சென்றவர்களை பேரளம் போலீசார் மடக்கிப்பிடித்து, திருப்பி அனுப்பினர். இதனால் மது வாங்க சென்றவர்கள் விரக்தி அடைந்தனர். குறுக்கு வழியில் காரைக்கால் சென்ற நபர்களையும் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story