விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக மாற்ற நடவடிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக மாற்ற நடவடிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 8 Jun 2021 4:17 PM GMT (Updated: 8 Jun 2021 4:17 PM GMT)

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

விக்கிரவாண்டி, 

ஆய்வுக்கூட்டம்

கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி, அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்,  மருத்துவ கலலூரி டீன் குந்தவிதேவி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி துறை பேராசிரியர்களோடு கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து கலந்தாலோசனை நடத்தினார். 
அதன்பிறகு மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கள ஆய்வு

தமிழகத்தில் இதுவரை 1039 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை மத்திய அரசின் தொகுப்பிலிருந்து குறைந்த எண்ணிக்கை யிலான மருந்துகள் மட்டுமே வந்துள்ளது. எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை தொடர்ந்து மத்திய அரசிடம் கேட்டு பெற உள்ளோம். மேலும் மத்திய அரசிடமிருத்து கொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்துகள் கேட்டுபெற்று பயன்படுத்தினோம். இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கொரோனா இறப்புகளை பொறுத்த வரை அரசு கூட்டி குறைத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசை பொறுத்தவரை கடந்த ஒரு மாத காலத்தில் விழுப்புரத்தோடு சேர்த்து 23 மாவட்டங்களில்  நேரில் கள ஆய்வு செய்துள்ளோம்.

கருப்பு பூஞ்சை நோய்க்கு தனி வார்டு

கலெக்டர் கூறுகின்ற அறிக்கையை விட ஒவ்வொரு கிராமத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் நேரில்சென்று கள ஆய்வு செய்துள்ளோம். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தேவைகள் குறித்து கல்லூரி டீன் பட்டியல் தந்துள்ளார். விரைவில் அவை நிறைவேற்றப்படும். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் டாக்டர்கள் கூடுதலாக கொரோனா பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து மாவட்டத்திலும் அரசு பொது மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய்க்கென்று தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருகிறது என்பது தவறான கருத்து. நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா நோய் சிகிச்சையின் போது ஸ்டிராய்டு ஊசி செலுத்தியவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் வருகிறது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் சிறப்பான பணியின் காரணமாக கடந்த ஒரு மாத காலத்தில் நோய் தொற்று அதிகளவு குறைக்கப்பட்டு, குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நடவடிக்கை

விழுப்புரம் அரசு மருத்துவக் கலலூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை வைத்துள்ளார். இதை ஏற்று இந்த நிதியாண்டில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக மாற்றிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் பேசினார். 
முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.பி.,க்கள் ரவிக்குமார், டாக்டர் கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் மற்றும் பல்வேறு துறைககளை சேர்ந்த அதிகாரிகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story