புதுச்சேரி மாநிலத்தில் மதுபான கடைகள் திறப்பு எதிரொலி: விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை
புதுச்சேரி மாநிலத்தில் மதுபான கடைகள் திறப்பு எதிரொலியாக விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
மதுபான கடைகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பஸ் போக்குவரத்துக்கும் மற்றும் வழிபாட்டு தலங்கள், சலூன் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகள் செயல்படஇன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கும் அரசு அனுமதி அளிக்காததால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பூட்டிக்கிடக்கின்றன.
இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்தில் மதுபான கடைகளை திறப்பதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் நேற்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து மதுபான கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள், மதுபானம் வாங்க அலைமோதினர்.
கடத்தலை தடுக்க
அதுபோல் தமிழகத்தில் இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில் ஒரு மாதமாக மதுபானம் கிடைக்காமல் சிரமப்பட்ட தமிழக பகுதியான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் மதுபான வகைகளை வாங்குவதற்காக நேற்று புதுச்சேரி மாநிலத்திற்கு படையெடுத்துச்சென்றனர்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபான வகைகளை வாகனங்களில் கடத்தி வரக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட எல்லையில் தீவிர சோதனை
அதன் அடிப்படையில் நேற்று மாவட்ட எல்லையான கெங்கராம்பாளையம், சிறுவந்தாடு, ராதாபுரம், கோட்டக்குப்பம், ஆரோவில், அனுமந்தபுரம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர்.
இந்த சோதனையின்போது மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என்றும் இ-பதிவு செய்து பயணிக்கிறார்களா? என்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஒரு மாதமாக மதுபானம் கிடைக்காமல் அல்லல்பட்ட மதுப்பிரியர்களுக்கு, புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மிகவும் குஷியாக இருந்தனர். ஆனால் மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசாரின் தீவிர சோதனை மற்றும் கட்டுப்பாடுகளின் காரணமாக மதுபானம் வாங்க முடியாமல் மதுப்பிரியர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.
Related Tags :
Next Story