அய்யன்கொல்லி பகுதியில் காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்
அய்யன்கொல்லி பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
பந்தலூர்
பந்தலூர் அருகே வனப்பகுதியையொட்டி உள்ள அய்யன்கொல்லி, மூலைக்கடை, குழிக்கடவு, அத்திசால், பாதிரிமூலா, செம்பக்கொல்லி, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, எடத்தால், மழவன்சேரம்பாடி உள்பட பல பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் நிலங்களில் வாழை, பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 20 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி பகுதியில் 9 காட்டு யானைகள் புகுந்தன. இந்த யானைகள் யாக்கோபு, ஜார்ஜ், பேபி உள்ளிட்ட பலரின் தோட்டத்திற்குள் நுழைத்து தேயிலை செடிகள், தென்னை, பாக்கு, வாழை ஆகியவற்றை மிதித்து நாசம் செய்தன.
மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டன. பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து சென்றன. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story