விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் முழு கவச உடையில் அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு


விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் முழு கவச உடையில் அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jun 2021 11:18 PM IST (Updated: 8 Jun 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் முழு கவச உடையில் அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனை இட நெருக்கடியில் உள்ளது. இதனால் இந்த மருத்துவமனையில் கட்டிட வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் விரிவுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 

அப்போது, அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம் குறித்து டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார். 

முழு கவச உடை

பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன், தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை நேரில் பார்க்க முடிவு செய்தார். தொடர்ந்து, அமைச்சர் சி.வி.கணேசன் முழு கவச உடையை அணிந்து, வார்டு பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த அவர், சிகிச்சை முறைகள் மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது அவருடன்  சப்-கலெக்டர் பிரவீன் குமார், தாசில்தார் சிவக்குமார், தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் எழில் ஆகியோரும் முழு கவச உடையில் சென்றிருந்தனர். 

204 படுக்கை வசதிகள்

ஆய்வு முடிவில் அமைச்சர் சி.வி. கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 204 படுக்கை வசதிகள் உள்ளன. 

தற்போது 76 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு போதுமான அளவிற்கு ஆக்சிஜன் கிடைப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்.கணேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், வக்கீல் ரவிச்சந்திரன், நம்பிராஜன், பாண்டியன், ஆசிரியர் பக்கிரிசாமி மற்றம் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story