புதுச்சேரியில் மதுபான கடைகள் திறப்பு: மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதில் நேற்று முன்தினம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடந்த மே 10-ந்தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 144 கடைகளும் மூடப்பட்டு இருக்கிறது.
மது கடைகள் திறப்பு
தமிழகத்தின் அண்டை மாநிலமான, கடலூரை ஒட்டி அமைந்திருக்கும் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்து வந்தது. இதனால், அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி முதல் மதுக்கடைகள், பார்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரியில் தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, அங்கு நேற்று முதல் மதுக்கடைகள் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு, மது விற்பனை ஜோராக நடந்து வந்தது.
மதுபிரியர்கள் குஷி
அதே நேரத்தில் புதுச்சேரியில் கடை திறக்கப்பட்டு இருப்பதால், கடலூர் மாவட்டத்தில் புதுச்சேரியை ஒட்டி அமைந்துள்ள எல்லைப்பகுதியில் வசிக்கும் மதுபிரியர்கள் குஷி அடைந்து உள்ளனர்.
ஏனென்றால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்காததால் மதுபிரியர்கள் பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகிறார்கள். இதை பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் சம்பவமும் அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுக்கும் பணியில் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
இதுபோன்ற சூழிலில் தான் புதுச்சேரியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. எனவே இனி மதுக்கடத்தல் சம்பவங்களும் அதிகரிக்கும் என்பதால் அதை தடுக்கும் வகையில் போலீசார் உடனடியாக தங்களது பணியை தீவிரப்படுத்தினர்.
அதன்படி கடலூர் மாவட்ட எல்லை பகுதிகளான பெரியகங்கணாங்குப்பம், மருதாடு, வான்பாக்கம், மேல்பட்டாம்பாக்கம், அழகியநத்தம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் நேற்று காலை முதல் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.
50 இடங்களில் சோதனை
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் அதில் வருபவர்களின் உடைமைகள் முழுவதையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுப்பி வைத்து வருகிறார்கள். அப்போது, இ-பதிவுடன் பயணம் செய்கிறார்களா?, மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர்.
மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான 7 சோதனை சாவடிகள், தற்காலிக சோதனை சாவடிகள் என்று மொத்தம் 50 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story