கடத்தூர் அருகே உடலில் காயங்களுடன் கிடந்த டிராக்டர் டிரைவர் சாவு
கடத்தூர் அருகே உடலில் காயங்களுடன் கிடந்த டிராக்டர் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கடத்தூர்:
டிராக்டர் டிரைவர்
சேலம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 45). திருமணமாகாதவர். இவர் பெங்களூருவில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று பழனிவேல் வேலை முடிந்த பின்னர் பெங்களூருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புளியம்பட்டி நடூர் பஸ் நிறுத்தம் அருகில் பழனிவேல் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பழனிவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் கொலை செய்யும் நோக்கில் தாக்கப்பட்டாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story