மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கடனுதவி வழங்க வேண்டும்-வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கடனுதவி வழங்க வேண்டும்-வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2021 11:45 PM IST (Updated: 8 Jun 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கடனுதவி வழங்க வேண்டும் என்று வங்கியாளர்களுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.

தர்மபுரி:
வங்கியாளர்கள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டம் வேளாண்மை மற்றும் சிறு குறு, நடுத்தர தொழில்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, சிறு குறு, நடுத்தர தொழில் கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் ஆகியவற்றிக்கு வங்கியாளர்கள் முக்கியத்துவம் அளித்து கடனுதவிகளை வழங்க வேண்டும்.
கடனுதவி
குறிப்பாக புளியை பதப்படுத்துதல், தேனீக்கள் வளர்த்தல் உள்ளிட்ட சுய தொழில்கள் செய்ய தேவையான கடனுதவிகளை விரைவாக வழங்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகள், நகர வங்கிகளும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு உள்ள காலமாக இருப்பதால் கடன்களுக்கான பறிமுதல் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் 2020-2021-ம் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நேரடி கடனாக ரூ.792.31 கோடியும், கொரோனா தொற்று கால சிறப்பு கடனாக ரூ.66.98 கோடியும் என மொத்தம் ரூ.859.29 கோடி கடனாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும்  கடன் வழங்க வங்கியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழ்வாதாரம்
மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு மூலம் அதிக அளவில் கடன்களை வழங்கி சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வங்கியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வந்து செல்வதை வங்கி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், இந்தியன் வங்கி பயிற்சி நிறுவன இயக்குனர் அரவிந்த், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பழனிமணி, உதவி திட்ட அலுவலர்கள், அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், வங்கிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story