ஆக்சிஜன் தயாரிக்க தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்; கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள்
ஆக்சிஜன் தயாரிக்கும் பணிக்கு தொண்டு நிறுவனங்கள் உதவிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி,
ஆக்சிஜன் தயாரிக்கும் பணிக்கு தொண்டு நிறுவனங்கள் உதவிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தொற்று 2-ம் அலை பரவுதலைத் தடுத்தல் மற்றும் உதவுதல் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கி எஸ்.சிவராசு பேசியதாவது:-
இணைய தள முகவரி
தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் இணையதள முகவரியில் https://ucc.uhcitp.in/ngoregistration தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ஒரு முறை மட்டும் பதிவு மேற்கொள்ள வேண்டும்.ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பதிவுகளை மேற்கொள்வதை தவிர்த்திடவும், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பதிவுகளை நீக்கம் செய்திடவும் வேண்டும்.
ஒருங்கிணைப்புக் குழு இணையதள முகவரியில் பதிவினை மேற்கொள்ளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் சரியான தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் இணையத்தில் பதிவு செய்துள்ள சேவைகளை உடனடியாக எவ்வித தாமதமுமின்றி செய்து முடிக்க வேண்டும்.
உதவிட வேண்டும்
ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவிட முன்வர வேண்டும். கொரோனா காலத்தில் வறுமையில் வாடுவோர், முதியோர், ஆதரவற்றோர் வேலைவாய்பற்றோர் உள்ளிட்டவர்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கி உதவிட வேண்டும்.
கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி உதவிடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ள பொருள்களை ஒருங்கிணைப்புக் குழு அலுவலர் தெரிவிக்கும் அலுவலரிடம் பொருட்களை ஒப்படைத்திட வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் பொருட்கள் ஒப்படைப்பு செய்த விபரத்தினையும் பொருட்களை பெற்றுக் அலுவலர்கள் பொருள்களை பெற்றுக்கொண்ட விவரத்தினையும் ஒருங்கிணைப்புக் குழு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் இணையத்தில் பொருட்கள் ஒப்படைப்பு செய்யப்பட்ட விபரம் பதிவேற்றம் செய்யப்படும்.
செல்போன் எண்கள்
இணையத்தில் பதிவு மேற்கொள்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 0431-2418995, 0431 2461240, 0431-2461245, 0431-2461243 மற்றும் 0431-2461263 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெளிவுரை பெற்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தபழனிகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தா, மாவட்ட சமூக நல அலுவலர் தமீம் முனிஷா மற்றும் அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story