உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்ட மனுக்களை காரணம் இல்லாமல் நிராகரிக்க கூடாது
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்ட மனுக்களை உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்க கூடாது என அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்ட மனுக்களை உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்க கூடாது என அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் திட்டம்
முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அனைத்து மனுக்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுக்களில் கொடுக்கப்பட்டு உள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
அந்த வகையில் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த துறைக்கு இணையதளம் மூலமாக அனுப்பப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை நேரடி கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிராகரிக்க கூடாது
மனுக்களை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணையுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்து, மனுதாரர்களுக்கு பதிலளிக்க வேண்டும். தக்க காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு மனுவினையும் நிராகரிக்ககூடாது. மனுக்களுக்கு விரைவாகவும், முறையாகவும் தீர்வு கண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயர் ஈட்டி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அனைத்து அலுவலகங்களில் இருந்து வருகை தந்த கணினி இயக்குனர்களுக்கு இணைய வழியில் உங்கள் தொகுதி முதல்-அமைச்சர் மனுக்களை எவ்வாறு கையாள்வது? எவ்வாறு பதிலளிப்பது? ஒரு அலுவலகத்திற்கு தொடர்பில்லாத மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு எவ்வாறு மாற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ரமேஷ் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story