கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருகிறது
திருப்பூர் மாநகரில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருகிறது என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருகிறது என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமை தாங்கினார்.
நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நோய் தடுப்பு நடவடிக்கை
கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் நேற்று (நேற்று முன்தினம்) வரை 13 ஆயிரத்து 87 பேர் நோயினால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 ஆயிரத்து 136 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் 4,066 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. 32 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக 78 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தொடர்ந்து அந்த பகுதிகளை கண்காணித்து வருகிறார்கள். நேற்று (நேற்று முன்தினம்) வரை 3,600 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா தொற்று குறைகிறது
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தினமும் 16 முதல் 20 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தினமும் 2,800 நோய்தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று சதவீதம் 54-ல்இருந்து தற்போது 8.11 சதவீதமாகும் குறைந்துள்ளது.
விதிமீறல்கள் மூலமாக நான்கு மண்டலங்களில் ரூ.8 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வீடு, வீடாக சென்று நோய் தொற்று உள்ளவர்களைக் கணக்கீடு செய்ய 1,100 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் மொத்தம் 46 ஆயிரத்து 753 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
வீட்டுக்கே சென்று சிகிச்சை
5 நகராட்சிகளில் 13 ஆயிரத்து 178 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 5,928 பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்க இரண்டு ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
சிகிச்சைக்கு உடனடியாக அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி செயல்பாட்டில் உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையின் அடிப்படையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே டாக்டர்கள் சென்று சிகிச்சை அளிக்கும் முறை திருப்பூர் மாநகராட்சியில் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் மாநகர பகுதியில் நடைபெற்று வரும் பணிகள், குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பஸ் நிலையம், அடுக்குமாடி வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.975 கோடியே 76 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இறப்பு வீதம் குறைகிறது
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி மற்றும் பொது சுகாதார அலுவலர்கள் ஒன்றிணைந்து நோய் தொற்று இல்லாத மாவட்டம் என்ற இலக்குடன் தடுப்புப் பணிகளை மாவட்டம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் போதிய அளவில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் சிகிச்சை மையம் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள்
முன்னதாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் பொள்ளாச்சி தொகுதி சண்முகசுந்தரம் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், நகராட்சி நிர்வாக மண்டல இணை இயக்குனர் சரவணகுமார், தி.மு.க திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story