சோதனை சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி
தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
தீவிர கண்காணிப்பு
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது பரவல் குறைந்து வருவதால் கடந்த 7-ந் தேதியில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இருந்தபோதிலும் பொது மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக- கேரள எல்லையான கோபாலபுரம், நடுப்புணி, வடக்குக்காடு, மீனாட்சி புரம் உள்பட பல்வேறு சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர, பிற வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னர், இ-பதிவு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இ-பதிவு இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பொள்ளாச்சி வந்தார். பின்னர் அவர் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
இதில் வடக்கிப்பாளையம் அருகே உள்ள நடுப்புணி சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டபோது அவர், அங்கிருந்த போலீசாரிடம் இந்த வழியாக வரும் வாகனங்கள் குறித்து முழுமையாக கண்காணிக்க வேண்டும்,
விதிகளை மீறி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா தடுப்பு பணியில் போலீசார் தீவிரம் காட்டுவதுடன், உடல் நலனிலும் போலீசார் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இ்ருந்தனர்.
Related Tags :
Next Story