எந்த அடிப்படையில் அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


எந்த அடிப்படையில் அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 9 Jun 2021 12:44 AM IST (Updated: 9 Jun 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கோர்ட்டுகளில் எதன் அடிப்படையில் அரசு வக்கீல்கள் நியமிக்கப்படுகின்றனர் என்பது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, ஜூன்
மாவட்ட கோர்ட்டுகளில் எதன் அடிப்படையில் அரசு வக்கீல்கள் நியமிக்கப்படுகின்றனர் என்பது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதி இல்லாதவர்கள்
மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஏ.கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ் கோர்ட்டுகளில் விரைவில் அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு வக்கீலாக நியமிக்கப்படுபவர்கள் அந்த பதவிக்கு தகுதியானவர்களாக இருப்பது மிக அவசியம். 
தகுதி இல்லாதவர்கள் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் மாவட்ட கோர்ட்டு மற்றும் கீழ் கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட வேண்டும்.
எனவே அரசு வக்கீல்கள் நியமன விதிகள் அடிப்படையில் சட்ட வல்லுனர் குழுவை அமைத்து மாவட்ட கோர்ட்டு மற்றும் கீழ் கோர்ட்டுகளுக்கு அரசு வக்கீல்களை நியமிக்கவும், அரசு வக்கீல்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதில்
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, முறையாக அரசு வக்கீல்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, அதை மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் ஒட்டப்படும். 1961-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின்பற்றி அரசு வக்கீல்கள் நியமனம் நடைபெறும் என்றார்.
உத்தரவு
இதையடுத்து மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ் கோர்ட்டுகளில் எந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை ஜூலை மாதம் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story