கொரோனாவுக்கு 10 கர்ப்பிணிகள் சாவு


கொரோனாவுக்கு 10 கர்ப்பிணிகள் சாவு
x
தினத்தந்தி 9 Jun 2021 1:06 AM IST (Updated: 9 Jun 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொரோனா 2-வது அலையில் வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி 10 கர்ப்பிணிகள் பலியாகி உள்ளனர். மேலும் குழந்தை பெற்ற பின்பு 17 பெண்கள் கொரோனாவுக்கு உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் கொரோனா 2-வது அலையில் வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி 10 கர்ப்பிணிகள் பலியாகி உள்ளனர். மேலும் குழந்தை பெற்ற பின்பு 17 பெண்கள் கொரோனாவுக்கு உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா 2-வது அலை

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் உயிர் இழந்திருந்தனர். குறிப்பாக 20 வயதுக்கு மேல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகஅளவில் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்திருந்தார்கள். 

இந்த நிலையில், பெங்களூருவில் கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணிகள், குழந்தை பெற்றெடுத்த பெண்களும் தங்களது உயிரை கொரோனாவுக்கு பறி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் கொரோனா 2-வது அலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிரசவத்திற்காக ஏராளமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

 அவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டு இருந்தது.

10 கர்ப்பிணிகள் சாவு

அவ்வாறு கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் குழந்தை பெற்ற ஓரிரு நாட்களில் உயிர் இழந்திருப்பது தொியவந்துள்ளது. அதாவது பெங்களூருவில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குழந்தை பெற்ற பின்பு 17 பெண்கள் பலியாகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

இவற்றில் பெரும்பாலும் ஆபரேசன் மூலமாக குழந்தை பெற்றெடுத்த பெண்களே கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்திருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனா்.

இதுபோல், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 10 கர்ப்பிணிகளும் பெங்களூருவில் உயிர் இழந்துள்ளனர். இந்த கர்ப்பிணிகள் உயிர் இழப்புக்கு தாமதமாக சிகிச்சைக்கு வந்ததே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

 கர்ப்பிணிகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கொரோனாவுக்கு பயந்து முதலில் சிகிச்சை பெறாமல், மூச்சு திணறல் ஏற்பட்ட பின்பு ஆஸ்பத்திரிக்கு வந்ததால், அவர்கள் உயிர் இழக்க நேரிட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Next Story