பொது நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பெண் நடைமுறை ரத்து


பொது நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பெண் நடைமுறை ரத்து
x
தினத்தந்தி 9 Jun 2021 1:38 AM IST (Updated: 9 Jun 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பொது நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பெண் பெற வேண்டும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு:

பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பொது நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பெண் பெற வேண்டும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சில மாற்றங்கள்

கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு வருகிற 28-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். 

பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்த நுழைவு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

இந்த பொது நுழைவு தேர்வு எழுதுவதற்கான பெயர்களை பதிவு செய்யும் பணி வருகிற 15-ந் தேதி தொடங்கும். இந்த நுழைவு தேர்வே, அறிவியல் அடிப்படையலான படிப்புகளில் சேர சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அந்த மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது நுழைவு தேர்வு

பொது நுழைவு தேர்வில் பங்கேற்க தகுதி பெற பி.யூ.கல்லூரியில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் எடுத்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது என்ற நிலை உள்ளது. 

ஆனால் இந்த ஆண்டு இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட பாடங்களில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் பொது நுழைவு தேர்வில் கலந்துகொள்ள முடியும்.

இது குறித்த தகவல்கள் அனைத்து பி.யூ.கல்லூரிகளுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். என்ஜினீயரிங் படிப்பில் சேர பொது நுழைவு தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

 இதற்கு முன்பு வரை பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாணவர்களின் எண்ணிக்கை

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாக 30 சதவீதம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 அதனால் 2 லட்சம் மாணவர்கள், மேற்படிப்பில் சேர விண்ணப்பிக்க உள்ளனர். கூடுதலாக தேர்ச்சி பெறும் மாணவர்களையும் மேற்படிப்பில் சேர்த்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

பொது நுழைவு தேர்வு தொடங்கும் முதல் நாளான வருகிற 28-ந் தேதி கணிதம், உயிரியல் பாடத்தேர்வும், 29-ந் தேதி இயற்பியல், வேதியியல் தேர்வும் நடத்தப்படுகிறது. வெளிமாநில மாணவர்களுக்கான கன்னட தேர்வு 30-ந் தேதி நடைபெறும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story