பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கும் பணி தொடங்கியது


பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கும்  பணி தொடங்கியது
x
தினத்தந்தி 9 Jun 2021 2:13 AM IST (Updated: 9 Jun 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கும் பணி தொடங்கியது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கும் பணி தொடங்கியது. 
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த சில நாட்களாக ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்த நாட்களில்  தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிவோர் மீது நடவடிக்கை எடுத்து, வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் நின்று வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின்போது அவசியமின்றி ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
3360 வாகனங்கள் பறிமுதல்
அவ்வாறு கடந்த மாதம் 16-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலான 23 நாட்களில் மொத்தம் 3,360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3323 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் முதன்முதலாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் கடந்த 16 -ந் தேதியில் இருந்து ஒன்றிரண்டு நாட்கள் வரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை  அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள்.
நாகர்கோவில் கோட்டார், வடசேரி, ஆசாரிபள்ளம், நேசமணி நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீசார் திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களின் ஆவணங்களை காண்பித்து வாகனங்களை பெற்றுச் செல்கிறார்கள்.


Next Story