தேவூர் பகுதியில் வாழையில் இலை கருகல் நோய் விவசாயிகள் கவலை


தேவூர் பகுதியில் வாழையில் இலை கருகல் நோய் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 9 Jun 2021 3:03 AM IST (Updated: 9 Jun 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் பகுதியில் வாழையில் இலை கருகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேவூர்:
தேவூர் பகுதியில் வாழையில் இலை கருகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாழை சாகுபடி
சேலம் மாவட்டம் தேவூர் அருகே சென்றாயனூர், பெரமச்சிபாளையம், அம்மாபாளையம், ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், கோனேரிபட்டி, புதுப்பாளையம், கோணகழுத்தானூர், புள்ளாகவுண்டம்பட்டி, காவேரிபட்டி, மேட்டுபாளையம், பாலிருச்சம்பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் வாழைத்தோப்புகள் உள்ளன. 
இவற்றில் நேந்திரம், கதலி, ரஸ்தாளி, மொந்தன் வாழை போன்ற வாழைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த பகுதியில் உள்ள வாழை மரங்களில் இலைகள் மஞ்சள் நிறமாகவும், கருகியும் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த இலை கருகல் நோய் குறித்து தேவூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
10 மாதத்தில் அறுவடைக்கு வரக்கூடிய கதலி, நேந்திரம், செவ்வாழை, பூ வாழை, தேன் வாழை உள்ளிட்ட ரக வாழைகள் அதிகளவில் இங்கு சாகுபடி செய்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு வாழை சாகுபடி செய்ய 900 வாழைக்கன்றுகள் வாங்கி நட்டுள்ளோம். ஒரு வாழைக்கன்றுக்கு ரூ.10 வீதம் ரூ.9 ஆயிரம் கன்று வாங்கிய வகையில் செலவு செய்துள்ளோம்.
விவசாயிகள் கவலை
விவசாய வயல்களில் நன்கு உழவு செய்து கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி கால்வாய், பாத்தி அமைத்து குழிதோண்டி வாழை கன்றுகள் நடவு செய்து, தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களை வெட்டுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்து வந்தோம். இந்நிலையில் வாழை நன்கு வளரும் தருவாயில் வாழை இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story