கலப்பு திருமணம் செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்ட தந்தையின் இறுதி சடங்கை தனியாக செய்த பிள்ளைகள்


கலப்பு திருமணம் செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்ட தந்தையின் இறுதி சடங்கை தனியாக செய்த பிள்ளைகள்
x
தினத்தந்தி 9 Jun 2021 10:48 AM IST (Updated: 9 Jun 2021 10:48 AM IST)
t-max-icont-min-icon

சந்திராப்பூரில் கலப்பு திருமணம் செய்ததால் சமூகத்தினரால் ஒதுக்கப்பட்ட தந்தையின் இறுதி சடங்கை அவரது பிள்ளைகள் மட்டும் தனியாக செய்த அவல சம்பவம் நடந்து உள்ளது.

மும்பை, 

சந்திராப்பூர் மாவட்டம் பான்கிராம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் ஒங்கலே(வயது55). இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இதையடுத்து இவர் சார்ந்த கோண்டாலி சமூகத்தினர், சமூகத்தை விட்டு பிரகாஷ் ஒங்கலேயை ஒதுக்கி வைத்தனர்.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகாஷ் ஒங்கலே உயிரிழந்துவிட்டார். ஒதுக்கி வைத்து 25 ஆண்டுகள் ஆன பிறகும் அவர் சார்ந்த சமூகத்தினர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஒருவர் கூட அவரது இறுதி சடங்கிற்கு வரவில்லை.

இதையடுத்து பிரகாஷ் ஒங்கலேவின் 7 மகள்களும், 2 மகன்களும் சேர்ந்து அவருக்கு இறுதி சடங்கை செய்ய முடிவு செய்தனர். இதில் அவர்கள் மட்டும் தந்தையை மயானம் வரை சுமந்து சென்றனர். பின்னர் அங்கு இறுதி சடங்கையும் முடித்தனர்.

இந்தநிலையில் சமூகத்தால் ஒதுக்கப்பட்டது குறித்து பிரகாஷ் ஒங்கலேவின் 2 மகன்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் பிரகாஷ் ஒங்கலே சார்ந்த கோண்டாலி பஞ்சாயத்து மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்து சந்திராப்பூர் எம்.எல்.ஏ கிஷோர் ஜோர்கேவார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள் கல்வி, குடும்ப தேவைக்கு நிதி உதவி அளிப்பதாகவும் உறுதி அளித்து உள்ளார்.


Next Story