கம்பத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு நூதன தண்டனை


கம்பத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு நூதன தண்டனை
x
தினத்தந்தி 9 Jun 2021 8:15 PM IST (Updated: 9 Jun 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

கம்பம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், கடந்த 7-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறி கடைகள் திறப்பவர்கள், அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். 
இந்தநிலையில் தேனி மாவட்டம் கம்பம் சர்ச் தெருவில் 20-க்கும் மேற்பட்டோர் தினசரி ஊரடங்கு விதிகளை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக கூடி அரட்டை அடித்து வந்துள்ளனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு கூட்டமாக கூடி அரட்டை அடித்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் போலீசார் வருவதை கண்டதும் நாலா புறமும் தெறித்து ஓடினர். இதையடுத்து போலீசார் தப்பியோடிய 10 பேரை பிடித்து விசாரித்தனர். 
பின்னர் அவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்காமல் நூதன தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, பிடிபட்ட 10 பேரையும் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்குள்ள பூங்காவில் சமூக இடைவெளியில் அமரவைத்தனர். அப்போது நாதஸ்வர இசை கலைஞர்களை போலீசார் வரவழைத்து, சினிமா பாடலுக்கு ஏற்ற இசையை வாசிக்க வைத்தனர். அந்த இசைக்கு ஏற்ப பிடிபட்ட நபர்களை பாட வைத்து நூதன தண்டனை வழங்கினர். 
மேலும் கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பிடிபட்ட 10 பேரையும் போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story