தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தொழிலாளி உள்பட 2 பேர் பலி
தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.
தேனி:
தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.
வேன் மோதல்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்துராஜ் (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் நேற்று போடிக்கு சென்று விட்டு, அங்கிருந்து பழனிசெட்டிபட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவருடன், போடி பங்கஜம் பிரஸ் 3-வது தெருவை சேர்ந்த பாண்டித்துரை மகன் பிரவீன்குமார் (19) என்பவரும் வந்தார். மோட்டார் சைக்கிளை முத்துராஜ் ஓட்ட, பிரவீன்குமார் பின்னால் அமர்ந்து வந்தார்.
போடி-தேனி சாலையில் கோடாங்கிபட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகில் அவர்கள் வந்த போது, எதிரே வீரபாண்டியை சேர்ந்த தெய்வேந்திரன் (28) என்பவர் வேனை ஓட்டி வந்தார். அப்போது அந்த வேனின் டயர் திடீரென்று வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய வேன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி வேன் நின்றது.
2 பேர் பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முத்துராஜ் வேன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பிரவீன்குமார் தூக்கி வீசப்பட்டு பின்னால் வந்த மற்றொரு கார் மீது விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். வேன் டிரைவர் தெய்வேந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது உயிருக்கு போராடிய பிரவீன்குமாரை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துராஜ் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரவீன்குமாரும் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து முத்துராஜின் தந்தை முருகன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், வேன் டிரைவர் தெய்வேந்திரன் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story