தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வாலிபர் உள்பட 16 பேர் கொரோனாவுக்கு பலி
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஒரேநாளில் வாலிபர் உள்பட 16 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
தேனி:
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஒரேநாளில் வாலிபர் உள்பட 16 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
பரவல் குறைகிறது
தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பரவல் 30 சதவீதமாக இருந்தது. அதாவது, 100 பேருக்கு பரிசோதனை செய்தால் அதில் 30 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் நோய் பரவல் 20 சதவீதமாக குறைந்தது. நேற்று நோய் பரவல் 10 சதவீதமாக குறைந்தது.
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 854 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 436 பேர் நேற்று குணமாகினர். தற்போது 3 ஆயிரத்து 503 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில், 397 பேர் செயற்கை ஆக்சிஜன் சுவாசம் உதவியுடனும், 56 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 பேர் பலி
கொரோனா பரவல் குறைந்த போதிலும், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்தநிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஒரேநாளில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அதன்படி, சின்னமனூரை சேர்ந்த 64 வயது மூதாட்டி, வீரபாண்டி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, 70 வயது முதியவர், மேகமலையை சேர்ந்த 54 வயது பெண், உத்தமபாளையத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி, போடி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், 58 வயது ஆண், 48 வயது பெண், 60 வயது மூதாட்டி, 73 வயது மூதாட்டி, கம்பம் பகுதியை சேர்ந்த 53 வயது ஆண், தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், 68 வயது முதியவர், வருசநாட்டை சேர்ந்த 50 வயது ஆண், கூடலூரை சேர்ந்த 60 வயது முதியவர், கோட்டூரை சேர்ந்த 42 வயது ஆண் ஆகியோர் உயிரை கொரோனா பறித்தது.
Related Tags :
Next Story