மைசூர் எக்ஸ்பிரசில் மதுபானம் கடத்தி வந்த மேலும் ஒருவர் கைது


மைசூர் எக்ஸ்பிரசில் மதுபானம் கடத்தி வந்த மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2021 4:00 PM GMT (Updated: 9 Jun 2021 4:00 PM GMT)

ரெயில்வே போலீசாரின் தொடர் சோதனையால் மைசூர் எக்ஸ்பிரசில் மதுபானம் கடத்தி வந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுவரை 1,070 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல்:

ரெயிலில் மதுபாட்டில்கள் கடத்தல்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மதுபானத்தை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

3 நாட்களில் 1,050 மதுபாட்டில்கள்

அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக நெல்லை, தூத்துக்குடிக்கு செல்லும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் தினமும் சோதனை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற மைசூர் எக்ஸ்பிரசில் மதுபானம் கடத்தி வந்த தூத்துக்குடியை சேர்ந்த அக்காள், தம்பி 2 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

அடுத்தநாள் அதே ரெயிலில் 500 மதுபாட்டில்களை கடத்தி வந்த மதுரையை சேர்ந்த 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். 

அதையடுத்து 3-வது நாளும் மைசூர் எக்ஸ்பிரஸ், தாதர் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களில் மதுபான பாட்டில்களை கடத்தி வந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

இதன் மூலம் அடுத்தடுத்து 3 நாட்களில் 1,050 மதுபான பாட்டில்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

தொடர்ந்து 3 நாட்கள் ரெயில்களில் மதுபானங்கள் கடத்தி வரப்பட்டதால் உஷார் அடைந்த ரெயில்வே போலீசார் வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக வரும் ரெயில்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர். 

அதன்படி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் போலீசார், நேற்று காலை 6 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்த மைசூர் எக்ஸ்பிரசில் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பெட்டியில் உள்ள இருக்கையின் அடியில் 2 பைகள் இருப்பதை பார்த்தனர். பின்னர் அவற்றை எடுத்து சோதனையிட்ட போது, 20 மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், அந்த பெட்டியில் பயணம் செய்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (வயது 44) என்பதும், மைசூரில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story