தவறான செல்போன் எண்ணை கொடுப்பது அதிகரிப்பு


தவறான செல்போன் எண்ணை  கொடுப்பது அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 4:24 PM GMT (Updated: 9 Jun 2021 4:24 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின்போது அச்சம் காரணமாக தவறான தொடர்பு எண்ணை கொடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால் சரியான தொற்றாளர்களை அடையாளம் கண்டு உரிய சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின்போது அச்சம் காரணமாக தவறான தொடர்பு எண்ணை கொடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால் சரியான தொற்றாளர்களை அடையாளம் கண்டு உரிய சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறைவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததுடன் அந்த நோய் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி பலர் பலியாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினரின் தொடர் நடவடிக்கையால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந் துள்ளதுடன், பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் கிராமங்கள் தோறும் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளதா, வேறு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்று கேட்டறிந்து தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
இதுதவிர நடமாடும் மருத்துவ குழுவினர் மாவட்டம் முழுவதும் சென்று கொரோனா பரிசோதனை செய்து தொற்று உள்ளவர்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு தொற்று பரிசோதனை செய்யும் போது அவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா இல்லையா என்று தெரிவிக்கவும், அவர்களை தனிமைபடுத்துவதோடு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தொடர்பு கொள்ள வசதியாக செல்போன் எண் கேட்டு பதிவு செய்யப்படுகிறது. 
தவறான செல்போன் எண்கள்
ஆனால், சமீப காலமாக அச்சம் காரணமாக பலர் இந்த செல்போன் எண்ணை தவறாக கொடுத்துவிடுகின்றனர். தொற்று இருந்தால் தன்னை தனிமைப்படுத்திவிடுவார்களோ, அக்கம்பக்கத்தினர் பேசமாட்டார்களே என்பது போன்ற காரணங்களினால் வெளியில் தொற்று இருப்பது தெரிவதை தவிர்க்கும் வகையில் வேண்டுமென்றே தவறான செல்போன் எண்ணை தெரிவித்து விடுகின்றனர்.
இவ்வாறு தவறான எண்ணை தெரிவிக்கும்போது அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தமில்லாதவருக்கு நோய்த்தொற்று இருப்பதாக குறுந்தகவல் செல்கிறது. மேலும், சுகாதாரத்துறையினர் தொடர் கண்காணிப்பு மற்றும் உடல்நலம் குறித்து விசாரிக்க முயலும்போது உண்மையான தொற்று உள்ளவர்களை அடையாளம் காண முடியாமலும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமலும் போய்விடுகிறது. 
மேலும் சம்பந்தப்பட்ட தொற்றாளர் தனக்கு தொற்று இருப்பதை அறியாமலேயே தனது வீட்டிலும் அக்கம்பக்கத்தினரும் வெளியில் உள்ளவர்களுக்கும் தொற்றினை சர்வ சாதாரணமாக பரப்பி விட்டு கொண்டிருக்கின்றனர். 
கோரிக்கை

இதுஒருபுறமிருக்க தொற்று பரிசோதனை செய்யாதவருக்கு வரும் குறுஞ்செய்தியால் மன உளைச்சல் அடைவதோடு தினமும் சுகாதாரத்துறையினர் தொடர்பு கொண்டு தற்போது உடல்நலம் எவ்வாறு உள்ளது. காய்ச்சல் உள்ளதா, மூச்சுத்திணறல் உள்ளதா என்று கேட்கும்போது பரிசோதனையே செய்யாமல் இவ்வாறு கேட்பது சம்பந்தப்பட்டவரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. எனவே, கொரோனா பரிசோதனை செய்யும்போது சரியான செல்போன் எண்ணை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story