கொரோனா தடுப்பு உபகரணங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்: விழுப்புரம் மருந்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
கொரோனா தடுப்பு உபகரணங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் விழுப்புரம் மருந்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம்,
விலை நிர்ணயம்
தமிழகத்தில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. இந்நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் போன்ற பொருட்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவினால் பலரது குடும்ப வருமானம் குறைந்திருக்கும் நிலையிலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியாக வேண்டிய நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு உபகரணங்களான கை சானிடைசர் (200 மி.லி.) - ரூ.110, என்.95 முக கவசம்- ரூ.22, சர்ஜிக்கல் முக கவசம் 2- ரூ.3, சர்ஜிக்கல் முக கவசம் 3- ரூ.4, சர்ஜிக்கல் முக கவசம் (பாபிரிக்) 3- ரூ.4.50, பி.பி.இ. கிட்- ரூ.273, டிஸ்போசபிள் அப்ரோன்- ரூ.12, சர்ஜிக்கல் கவுண்- ரூ.65, ஸ்டெரைல் கிளவுஸ்- ரூ.15, எக்சாமினேசன் கிளவுஸ்- ரூ.5.75, நான்ரீபிரித்தர் மாஸ்க்- ரூ.80, ஆக்சிஜன் மாஸ்க்- ரூ.54, புளோமீட்டர் வித்ஹூமி டிபையர்- ரூ.1,520, பிங்கர்டிப் பல்ஸ் ஆக்சிமீட்டர்- ரூ.1,500, முக ஷீல்டு- ரூ.21 என்று அரசு, விலை நிர்ணயம் செய்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இந்நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள மருந்து கடைகளில் முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் நேற்று விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் வினோத்குமார், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி உள்ளிட்டோர் விழுப்புரம் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருந்து கடைகளில் அரசு நிர்ணயித்த விலையின்படி கொரோனா தடுப்பு உபகரணங்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ததோடு அந்த உபகரணங்களை வாங்கிச்சென்ற பொதுமக்களிடம் இருந்த ரசீதையும் வாங்கி பார்வையிட்டனர்.
கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
மேலும் கொரோனா தடுப்பு உபகரணங்களை எந்த காரணத்தை கொண்டும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், அரசு நிர்ணயித்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மருந்து கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியதோடு, இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story