காய்கறி விற்பனை வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
உடுமலையில் காய்கறி விற்பனை வாகனங்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்துள்ளது.
உடுமலை
உடுமலையில் காய்கறி விற்பனை வாகனங்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்துள்ளது.
வாகனம் மூலம் விற்பனை
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவி வருவதை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கில் அரசு அடுத்தடுத்து சில தளர்வுகளை அறிவித்தது.
பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கான காய்கறிகள், அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே கிடைக்கும் வகையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள், தோட்டக்கலைத்துறை, மகளிர் சுய உதவிகுழுக்கள் ஆகியவற்றின் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை அரசு ஏற்பாடு செய்தது. இந்த சரக்கு வாகனங்கள் மூலமாக காய்கறிகள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
காய்கறி கடைகள் திறப்பு
இந்த நிலையில் மளிகைக்கடைகள் மற்றும் காய்கறிகடைகளை திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததைத்தொடர்ந்து கடந்த 7-ம்தேதி காலை முதல் மளிகைக்கடைகள் மற்றும் காய்கறிகடைகள் திறக்கப்பட்டுள்ளன. உடுமலையில் ராஜேந்திரா சாலை, ராமசாமி நகர், தங்கம்மாள் ஓடைவீதி, பழனிசாலை, பொள்ளாச்சி சாலை, தளி சாலை, கொழுமம் சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை உள்ளிட்ட பல சாலைகளில், சாலையோரம் திறந்தவெளி காய்கறிகடைகள், அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள மாலை5மணி வரை செயல்பட்டு வருகிறது. சிலர் காய்கறிகளை வாங்கி சென்று அவரவர் வீடுகளுக்கு முன்பும் சிறிய அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
ஊரடங்குக்கு முன்பு உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர்சந்தைக்கு தினசரி சராசரியாக 75 விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது உழவர்சந்தை அடைக்கப்பட்டுள்ளதால், உழவர்சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளில் பெரும்பாலானோர் ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் செயல்படும் காய்கறிகமிஷன் மண்டிகளுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு கமிஷன் மண்டி உரிமையாளர்கள், காய்கறிகளை ஏலம் விடுகின்றனர்.ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரி வாங்கி செல்கின்றனர்.
வாகனங்கள் குறைந்தது
இந்த நிலையில் தற்போது உடுமலை உழவர்சந்தைக்கு முன்பு கபூர்கான் வீதி, ஆசாத் வீதி மற்றும் ராமசாமி நகர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் சாலையோர காய்கறிகடைகள் காலை 6 மணிக்கே செயல்படத்தொடங்குகின்றன. நடமாடும் காய்கறி விற்பனை கடைகளும் அந்த பகுதியில் ஒரே இடத்தில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றன. நேற்று அந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட காய்கறிகடைகள் காலை10மணிவரை இருந்தன.அந்த பகுதியில் காய்கறிகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
காய்கறிகடைகள் திறக்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்குத்தேவையானகாய்கறிகளை மாலை 5 மணி வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எங்கு சென்று வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலைஉள்ளது. அதனால் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரும் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களில் காய்கறிகள் விற்பனை குறைந்ததாக கூறப்படுகிறது. வீதி, வீதியாக குடியிருப்பு பகுதிகளுக்கு வந்துகொண்டிருந்த நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்துள்ளது.
Related Tags :
Next Story